உலகம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி- 29 பேர் காயம்

Published On 2023-06-19 10:17 GMT   |   Update On 2023-06-19 10:49 GMT
  • பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
  • பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 20-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்று வரை, பல வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல்கள் நடத்துவதும், இதற்கெதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

இன்று நடைபெற்ற ஒரு தாக்குதலில், மேற்குக்கரை (West Bank) நகரமான ஜெனின் தெருக்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய துப்பாக்கி சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 29 பேர் காயமடைந்ததாகவும், பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் கலீத் அசாசா (21), கஸ்ஸாம் அபு சரியா (29), மற்றும் அகமது சக்ர் (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜெனின் நகரிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காடசி, இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, ராணுவ நடவடிக்கையின்போது அப்பகுதியில் ஒரு ராக்கெட்டை ஏவுவதைக் காட்டுகிறது.

ஜெனின் நகரம், வட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனியத்தின் ஒரு முக்கிய நகரம். பாலீஸ்தீன போராளிகள் நிறைந்த பகுதி. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, மேற்குக்கரை பகுதியில் நடந்த வன்முறைகளில் இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன வன்முறை வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மேற்குக்கரையில் இரவு நேர திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. அவ்வாறான காலங்களில், இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் போராளிகள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஊடுருவல்களை எதிர்த்து கல் எறிந்த இளைஞர்கள் மற்றும் மோதலில் ஈடுபடாத மற்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News