சியோல் நகரில் வரலாறு காணாத மழைக்கு 9 பேர் உயிரிழப்பு- 6 பேரை காணவில்லை
- மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை
- தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
சியோல்:
தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் குறித்து கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.