1, 2 அல்ல, 48 வருட சிறைவாசம் - இறுதியில் நிரபராதி
- சிறைக்கு சென்ற போது சிம்மன்ஸிற்கு வயது 22 தான் என்பது குறிப்பிடத்தக்கது
- சிம்மன்ஸ் இழந்த வருடங்களை யார் தருவார் என பயனர்கள் விமர்சிக்கிறார்கள்
அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama).
1975 காலகட்டத்தில் இம்மாநில தலைநகரமான ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) எனும் இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தான் லூசியானா (Louisiana) மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார்.
ஆனால், நீதிமன்றம் அவருக்கும், அவருடன் கைது செய்யப்பட்ட டான் ராபர்ட்ஸிற்கும், மரண தண்டனை வழங்கியது. சில ஆண்டுகளில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
அப்போது சிம்மன்ஸிற்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஜூலையில் இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது.
தற்போது இந்த வழக்கில் ஓக்லஹாமா மாவட்ட நீதிமன்றம், சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை ரத்து செய்தது.
இதை தொடர்ந்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே "குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில்" (National Registry of Exonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராகிறார் க்ளின் சிம்மன்ஸ்.
கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார் சிம்மன்ஸ்.
ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும்.
தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறை தண்டனை அனுபவித்ததை குறித்து, "பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் " என தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் சிம்மன்ஸ் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் பயனர்கள், "அவர் இழந்த வருடங்களை யார் தருவார்கள்?" என விமர்சித்து வருகின்றனர்.