ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு - 80 ஆண்டுகால வழக்கில் தீர்ப்பு
- ஃபோர்னெல்லி பகுதியில் 6 இத்தாலியர்களை நாஜி தூக்கிலிட்டு கொன்றனர்
- சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின்படி இத்தாலிய அரசு தொகையை வழங்குகிறது
ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது பதவிக்காலத்தில் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொன்று குவித்தனர்.
அக்டோபர் 1943-இல், தனது முன்னாள் நட்பு நாடான இத்தாலியை ஜெர்மனி ஆக்ரமித்த போது தங்கள் நாட்டு போர்வீரரை கொன்றதாக குற்றம் சாட்டி தெற்கு இத்தாலியின் மொலிஸ் பகுதியை சேர்ந்த ஃபோர்னெல்லி எனும் பிராந்தியத்தில் 6 இத்தாலிய குடிமக்களை அப்போதைய நாஜி படையினர் தூக்கிலிட்டு கொன்றனர்.
1939-இல் தொடங்கி 1945 வரை தொடர்ந்த இரண்டாம் உலக போரின் கடைசியில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நாஜி படைகளை சேர்ந்தவர்களின் மீது போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஃபோர்னெல்லி சம்பந்தமான வழக்கு நீண்ட காலமாக இத்தாலியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம் நடந்து 80 வருடங்கள் கழித்து, தூக்கிலடப்பட்டு இறந்த 6 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.107 கோடி ($13 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்கவும், உயிரிழந்த 6 பேரின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் என்றும் இத்தாலிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நஷ்ட ஈட்டுத்தொகையை, ஜெர்மனி அரசுக்கு பதிலாக இத்தாலி அரசுதான் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
"நடந்த கொடூரத்தை நாங்கள் இன்னும் மறக்கவில்லை" என இது குறித்து, இத்தாலியில் பலியான 6 பேரில் ஒருவரின் கொள்ளு பேரனான மாரோ பெட்ரார்கா கூறினார். தங்களது கொடூர குற்றச்செயல்களுக்காக ஜெர்மனி அரசாங்கம்தான் இந்த நஷ்ட ஈட்டை தர வேண்டும் என யூத அமைப்புகள் தெரிவிக்கின்றன.
2016-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நாஜிகளின் போர் குற்றத்திற்கு, சுமார் 22 ஆயிரம் இத்தாலியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகினர் என்பதும் தெரியவந்துள்ளது.