ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதிக்களுக்கு குறி.. ஏமன் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் - வீடியோ
- பாலஸ்தீன போரை எதிர்த்து ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்
- எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் சூளுரைத்துள்ளார்.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஒரு வார காலமாக மிகப்பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. லெபனான் முழுவதும் பரவியுள்ள ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்துச் சிதறியதால் 35 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. 4000 பேர் வரை படுகாயமடைந்தனர். தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா உயர் கமாண்டர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாலஸ்தீன போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகச் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவை போல ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறனர். எனவே தற்போது ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து 1,800 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை. எங்களைச் சீண்டுபவர்களை நாங்கள் அழித்தொழிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட்[Yoav Gallant] சூளுரைத்துள்ளார்.