நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி - காசா குடியிருப்பு மீது குண்டு மழை - 72 பேர் பலி
- வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது
லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,452 பேரும், காசாவில் இதுவரை 43,846 பேர் உயிரிழந்துள்ளனர்.