உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஏஐ: ஒத்துழைக்க உறுதியளித்த சீனா
- இரண்டாம் உலக போரில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிலெட்ச்லி பார்க்
- ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்து உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது
தொழில்நுட்ப துறையில் "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்தும், அதனால் ஏற்பட கூடிய நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முன் வந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக இது குறித்து ஆலோசிக்க தலைநகர் லண்டனுக்கு வெளியே, பிலெட்ச்லி பார்க் (Bletchley Park) எனும் இடத்தில் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரு நாள் சந்திப்பு நடந்தது. இரண்டாம் உலக போரை முடிவுக்கு கொண்டு வர பிலெட்ச்லி பார்க்கில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில், ஏஐ-யின் தாக்கத்தை குறித்து நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்துகளை உடனுக்குடன் கண்டறியவும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு நீக்கும் கொள்கைகளை வகுக்கவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டு அனைத்து நாடுகளும் "பிலெட்ச்லி பிரகடனம்" (ப்ளேச்சலே Declaration) எனும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான துணை மந்திரி வூ ஜாவோஹுய் (Wu Zhaohui), சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்க சீனாவும் ஒத்துழைக்க தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.
"பல நாட்டு தலைவர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டுள்ளது ஒரு சாதனை. அடுத்த 6 மாதங்களில் தென் கொரியாவில் ஒரு மாநாடும், அதற்கடுத்த 6 மாதங்களில் பிரான்ஸில் ஒரு மாநாடும் நடக்க உள்ளது" என இந்த சந்திப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப துறை அமைச்சர் மிசெல் டொனெலான் (Michelle Donelan) தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இதில் கலந்து கொண்டார்.
2023க்கான அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக "ஏஐ" உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் காலின்ஸ் அகராதி வெளியிடும் பதிப்பகம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.