அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன- சர்வதேச அமைப்பு தகவல்
- பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்திடம் 225-ம் பாகிஸ்தானிடம் 165-ம் உள்ளன.
- சீனா, பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அதே அளவு அணு ஆயுதங்கள் உள்ளன.
ஸ்டாக்ஹோம்:
சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இயங்கி வரும் சர்வதேச அமைதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அணு ஆயுதங்களை வைத்துள்ள அனைத்து நாடுகளும் தங்களது ஆயுத களஞ்சியத்தை மேம்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாக 12,705 அணு ஆயுதங்கள் பல்வேறு நாடுகளிடம் உள்ளது.
இதில் 90 சதவீத அணு ஆயுதங்கள் ரஷியா (5977), அமெரிக்காவிடம் (5428) உள்ளன. சீனாவில் 350 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்திடம் 225-ம் பாகிஸ்தானிடம் 165-ம் உள்ளன.
இந்தியாவிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 156 அணு ஆயுதங்கள் இருந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனது அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது.
சீனா, பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அதே அளவு அணு ஆயுதங்கள் உள்ளன. சீனா புதிதாக 300 ஏவுகணைகளை உருவாக்கி வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளது.
இதுகுறித்து சர்வதேச அமைதி மைய நிர்வாகி வில்பிரைட் வான் கூறும்போது, அனைத்து அணு ஆயுத நாடுகளும் தங்களது ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன அல்லது மேம்படுத்துகின்றன.
பெரும்பாலும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்துகின்றன. ராணுவ நடவடிக்கைகளில் அணு ஆயுதங்கள்? பங்கு மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது என்றார்.
இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப சிறந்த வினியோக அமைப்புகளுடன் தனது அணு ஆயுதங்களை நவீன மயமாக்குவதில் சீராக முன்னேறி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.