இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை நிறுத்தியது அமெரிக்கா
- இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
- ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
காசா:
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.