மியான்மர் புலம்பெயர்ந்தோர் முகாமில் குண்டு வெடிப்பு: 29 பேர் உயிரிழப்பு
- தன்னாட்சி கோரி 1960களில் இருந்தே போராட்டங்கள் நடைபெறுகின்றன
- தாக்குதலில் 11 குழந்தைகளும் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்
கடந்த 2021ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவ புரட்சியின் விளைவாக அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது.
மியான்மரில் தன்னாட்சி கோரி பல வருடங்களாக போராடி வரும் அமைப்பு, கசின் சுதந்திர குழு (Kachin Independence Organization). இது மியான்மர் (முன்னர் பர்மா) அரசை எதிர்த்து 1960களில் இருந்தே போராடி வருகிறது. போராடங்கள் 2011க்கு பிறகு தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு மியான்மரில் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா (Laiza) நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தது. இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்; 56 பேர் காயமடந்தனர். காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கசின் சுதந்திர குழு அறிவித்துள்ளது. கசின் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுதந்திர குழுவிற்கு அளித்து வரும் ஆதரவை விரும்பாத மியான்மர் ராணுவம் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"இத்தாக்குதல் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான ஒரு போர் குற்றம்", என முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் ராணுவம் இருப்பதை திட்டவட்டமாக மறுத்த ஆட்சியில் இருக்கும் "ஜன்தா" ராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜா மின் டுன் (Zaw Min Tun), "அப்பகுதியில் ராணுவத்தினருக்கு எந்த செயல்பாடும் எப்போதும் இருந்ததில்லை. போராடும் அமைப்பினர் வெடிப்பொருட்களை தேக்கி வைத்ததால் அதில் விபத்து ஏற்பட்டு இது நிகழ்ந்திருக்கலாம்," என தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகளின் சபை தனது ஆழ்ந்த கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது.