உலகம்

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் தொடர் தாக்குதல்.. இந்தியா கண்டனம்

Published On 2024-10-12 15:07 GMT   |   Update On 2024-10-12 15:07 GMT
  • துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன
  • கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துமதத்தைப் பின்பற்றும் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. தற்போது நவராத்திரி விழா கொண்டாட்டங்களை ஒட்டி அந்த தாக்குதல்கள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக நடந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த இடையூறு சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக தலைநகர் டாக்காவில் உள்ள தண்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை மண்டபம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும், இதில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பிரதமர் மோடி சார்பில் வங்கதேசத்தின் சக்திரா நகரில் உள்ள ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் அம்மனுக்கு வழங்கப்பட்ட கிரீடம் திருடுபோன சம்பவமும் நிகழ்ந்தது. இந்த தொடர் சம்பவங்களைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது. கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது பலநாள் திட்டமிட்ட செயலாக தெரிகிறது. இதை நாங்கள் கவனித்து வருகிறோம். புனிதப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரினதும் அவர்களது வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News