உலகம்

திருட்டை தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த இந்தியர்: துப்புதுலக்கும் அமெரிக்க காவல்துறை

Published On 2023-10-10 14:57 GMT   |   Update On 2023-10-10 14:57 GMT
  • பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
  • கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.

இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.

இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.

அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.

இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.

அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.

கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News