உலகம்

கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்ய ஆஸ்திரேலியா முடிவு

Published On 2024-01-23 06:43 GMT   |   Update On 2024-01-23 07:08 GMT
  • வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவுவதாக இல்லை என்பதால் தற்போது ரத்து செய்ய இருக்கிறது.

ஆஸ்திரேலியா அரசு கடந்த 2012-ம் ஆண்டு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம், அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில்  அதிபர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுப்பதாகும்.

இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், ஆஸ்திரேலியா நினைத்தபடி இந்த கோல்டன் விசா திட்டம் ஆஸ்திரேலியா நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவவில்லை. இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்குப் பதிலாக திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் முதலீடு செய்தால், ஆஸ்திரேலியாவில் ஐந்து ஆண்டுகள் வரை தங்கியிருக்க முடியும். வெளிநாட்டைச் சேர்ந்த அதிகமான முதலீட்டார்களை ஈர்ப்பதற்கான இந்த திட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டு வந்தது. கான்பெர்ரா ஆயிரக்கணக்கான கோல்டன் விசாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 85 சதவீதம் சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணத்தை வைக்கவும், பணமோசடியில் ஈடுபடுவதற்கும், பணம் தொடர்பான பிற மோசடிகளுக்கும் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2016-ல் நடத்தப்பட்ட ஆய்விலும் இது தெரிய வந்தது.

Tags:    

Similar News