உலகம்

ஜனநாயகத்திற்காக ஒன்று கூடுகிறோம்: கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்த அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள்

Published On 2024-11-01 07:06 GMT   |   Update On 2024-11-01 07:06 GMT
  • அவேஞ்சர்ஸ் நடிகர்கள் வீடியோ கால் மூலம் ஒன்று கூடினர்.
  • அப்போது அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விடியோ காலில் இணைந்துள்ளனர். அப்போது அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து விவாதித்தனர். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஜனநாயகத்திற்கான ஒன்று கூடுவோம், எப்போதும் கமலா. நாங்கள் உங்களோடு நிற்கிறோம்" என கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிம் வால்ஸ் ஆகியோரை டேக் செய்து" மார்க் ரஃப்ல்லோ வீடியோ வெளியிட்டுள்ளார்.

தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற்றாலும் முன்னதாகவே வாக்களிக்கும் வசதி உள்ளது. ஜோ பைடன் 40 நிமிடங்கள் காத்திருந்தது தனது வாக்கை செலுத்தினார். பல்வேறு மாகாணங்களில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News