உலகம் (World)

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை

Published On 2024-10-24 02:29 GMT   |   Update On 2024-10-24 02:29 GMT
  • மாணவர் பிரிவு கொலை, சித்தரவதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
  • மாணவர்கள் போராட்டத்தின்போது பல்கலைக்கழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்ட்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வலுக்கட்டாயமாக வங்கதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியேறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ராணுவம் அவருக்கு 45 நிமிடம் கால அவகாசம் கொடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேசம் சத்ரா லீக் என்ற பெயரில் இயங்கி வந்தது. போராட்டத்தின்போது கொலைகள், துன்புறுத்தல், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் ஜூலை மாதம் அமைதியாக நடைபெற்றது. சத்ரா லீக் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News