இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த வங்கதேச நீதிமன்றம்
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.