உலகம் (World)

ஹிந்துஜா குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை

Published On 2024-06-22 04:00 GMT   |   Update On 2024-06-22 04:49 GMT
  • ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் இந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது.
  • ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர்

ஜெனிவா:

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் இந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்ய மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் (ரூ.2,217) செலவு செய்கின்றனர். அதே சமயம், வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் (ரூ.660) மட்டுமே வழங்குகின்றனர். ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுவிட்சர்லாந்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Tags:    

Similar News