சகோதரத்துவம் ரொம்ப முக்கியம்.. மாலத்தீவு அதிபருக்கு மோடியின் பக்ரீத் வாழ்த்து
- சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.
- அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருங்குடி மக்களால் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை மக்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை வெளியேற்றினார். சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது. இலங்கை உட்பட அண்டை நாடுகளை சீனாவின் பக்கம் செல்லாமல் தன் கைவசம் வைத்துக்கொள்ள ஆரம்பம் முதலே இந்தியா மெனக்கிட்டு வருகிறது. எனவே மாலத்தீவுடன் இணக்கத்தை ஏற்படுத்துவது இந்தியாவுக்கு இன்றியமையாததாகிறது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் முய்சு கலந்துகொண்டார். இந்த நிலையில்தான் மோடியின் இந்த பக்ரீத் வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, தியாகத்தாலும் சகோதரதத்துவதாலும் இந்த திருநாள் உருவானது. ஒரு இணக்கமாக உறவை கட்டமைப்பதற்கும் சகோதரத்துவமும் தியாகமும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளார்.