வடகொரியாவுக்கு அடுத்து நீங்கதான் ஆபத்து.. இந்தியாவை 'சைபர்' எதிரியாக அறிவித்த கனடா
- ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டனர்
- தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கை வெளியிடப்பட்டது
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.