உலகம்

ஊழியருடன் ரகசிய உறவு.. பணிநீக்கம் செய்யப்பட்ட ராயல் பேங் ஆப் கனடா CFO மீது வழக்கு - சர்ச்சையாவது ஏன்?

Published On 2024-08-24 08:51 GMT   |   Update On 2024-08-24 08:51 GMT
  • வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது
  • மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைத்துள்ளார்

ராயல் பேங் ஆப் கனடா 

உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் [Royal Bank of Canada] சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் [Nadine Ahn] கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

 

காதல் உறவு 

வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேடைன் தொடர்பிலிருந்த மேசன் என்ற அந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

வழக்கு 

மேலும் இதுதொடர்பாக நேற்று [ஆகஸ்ட் 23] நீதிமாறத்திலும் ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குத் தொடர்ந்துள்ளது. தனது அறிக்கையில் ராயல் பேங் ஆப் கனடா கூறியதாவது, வங்கியின் விதிகளை மீறி தலைமை நிதி அதிகாரியாக இருந்த நேடைன் ஆன் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த மேசனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக உறவு வைத்துள்ளார். ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தில் நேடைன் ஆன் மேற்பார்வையில் பணியாற்றிவந்த மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

 

நஷ்டஈடு 

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நேடைன் ஆன், தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்றும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மக்கள் மத்தியில் தனது பெயருக்கு வெளிப்படையாகக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆன் மற்றும் மேசன் ஆகிய இருவரும் வங்கியிடம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

Tags:    

Similar News