இஸ்ரேலை சூழும் போர் பதற்றம்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - உதவி எண்கள் அறிவிப்பு
- தேவையில்லாமல் நகரத்தை விட்டு வெளியிடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் அரசு, அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
மறுபுறம், ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் நகரின் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழலில் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெல் அவிவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும். தேவையில்லாமல் நகரத்தை விட்டு மற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். இந்தியத் தூதரகம் நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுவரை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளாத இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். 24x7 உதவி எண்கள்
+972-547520711
+972-543278392