அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்: சீனா கடுங்கோபம்
- பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
- இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா
தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.
இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.
தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.
இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.