உலகம்

மட்சு தீவில் படகுகளில் ரோந்து செல்லும் வீரர்கள்

சட்டவிரோத குடியேற்றம்.. 10 மணி நேரம் நீந்தி தைவானை அடைந்த சீனர்.. ஆனால் குளவியால் வந்த சோதனை

Published On 2023-07-28 11:07 GMT   |   Update On 2023-07-28 11:07 GMT
  • ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
  • "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும்.

2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். 2020ல் 7 மணி நேரம் நீந்தியே தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதே போன்று 4 தினங்களுக்கு முன், சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு 40 வயது சீனர் ஒருவர், கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை கையோடு எடுத்து சென்றிருக்கிறார்.

மட்சு தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதியில் நுழைந்தார். வெற்றிகரமாக நீந்தி அங்கு நுழைந்தவர் அங்கேயே அரசுக்கு தெரியாமல் வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் அவருக்கு சோதனை குளவி வடிவத்தில் வந்தது. ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

இதனால் மட்சு தீவுகளில் சுற்றுலா பயணிகளிடம் உதவி கோரினார். சுற்றுலா பயணிகள் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு இவரை குறித்து தகவல் தெரிவித்தனர்.

சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள ஹுவாங் கி தீபகற்பத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

அதிகாரிகள் விரைந்து வந்து அவரிடம் தகவல்களை கேட்டறிந்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பது உறுதியானது.

இதனையடுத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட அவரை பெய்கன் சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

ஹுவாங்கி தீபகற்பத்திற்கும் பெய்கன் தீவிற்கும் இடையிலான தூரம் சுமார் 12 கி.மீ. சீனாவின் கடற்கரை பகுதியிலிருந்து தைவான் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தைவான் பகுதிக்கும், மெயின்லேண்ட் பகுதிக்கும் இடையேயான சட்டத்தின்படி விசாரணைக்காக லியன்சியாங் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சமீபத்திய சில ஆண்டுகளாக தைவானை சுற்றி தனது ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News