உலகம்

புற்றுநோயை குணப்படுத்தும் சோப்: 14 வயதில் அசத்திய இளம் விஞ்ஞானி

Published On 2023-10-24 09:16 GMT   |   Update On 2023-10-24 10:54 GMT
  • மாணவர்களுக்கு பரிசு தொகையாக சுமார் ரூ.20 லட்சம் கிடைக்கும்
  • எத்தியோப்பியாவில் பிறந்து, பின் 4 வயதிலேயே ஹேமன் அமெரிக்கா வந்து விட்டான்

அமெரிக்காவில் 5-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் தங்கள் அறிவாற்றலை செலுத்தவும், "3 எம் அண்ட் டிஸ்கவரி எஜுகேஷன்" (3M and Discovery Education) எனும் அமைப்பால் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தின் அன்னண்டேல் பகுதியை சேர்ந்த 14 வயதான ஹேமன் பெகேல் (Heman Bekele) எனும் 9-ஆம் வகுப்பு மாணவன் கலந்து கொண்டான். ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவில் பிறந்து, 4 வயதில் அமெரிக்காவிற்கு பெற்றோருடன் வந்த ஹேமன் அமெரிக்காவிலேயே தொடர்ந்து கல்வி பயின்று வருகிறான். ஹேமன், உயிரியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் மிகவும் விருப்பமுடையவன்.

இந்த இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்பிய அவனை டாக்டர். மஹ்ஃபூஸா அலி (Dr. Mahfuza Ali) எனும் விஞ்ஞானி வழிநடத்தினார்.

இதில் பங்கேற்ற ஹேமன், தனது கண்டுபிடிப்பாக புதிய சோப் ஒன்றை காட்சியில் வைத்தான். இந்த சோப்பிற்கான உற்பத்தி செலவு ஒரு அமெரிக்க டாலருக்கும் (ரூ.80) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தோல் புற்றுநோயை இந்த சோப் குணமாக்கும் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

பல இளம் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஹேமன் முதல் பரிசை வென்றான். இத்துடன் "அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி" எனும் விருதும் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டான்.

இப்போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக சுமார் ரூ.20 லட்சம் ($25,000) வழங்கப்படும்.

2020ல் உலகளவில் சுமார் 15 லட்சம் பேருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பின்னணியில் ஹேமனின் இந்த முக்கிய கண்டுபிடிப்பு எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

Tags:    

Similar News