உலகம்

உலகமே... இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ

Published On 2023-11-23 04:52 GMT   |   Update On 2023-11-23 06:27 GMT
  • மருத்துவமனைகளின் ஒரு பகுதியை தங்களது செயல்பாட்டிற்கு ஹமாஸ் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
  • இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு வீடியோ மூலம் காண்பித்து வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகள் செல்லாத வண்ணம் போரை தொடர்ந்து நடத்தியது. இதனால் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் தெற்கு பகுதி நோக்கி ஓடத்தொடங்கினர்.

இஸ்ரேலின் பதிலடியில் காசா சீர்குலைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள்- சிறுவர்கள் மிகப்பெரிய அளவில் கொல்லப்பட்டனர். இதுவரை 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகள், மசூதிகள் என எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை. 

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மருத்துவமனைகளை தங்களது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், மருத்துவ நிர்வாகம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இதை மறுத்து வந்தனர்.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது. இந்த நிலையில், டியர் உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் அக்கறை கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் தயாரானது. இதற்கு இஸ்ரேல் மந்திரசபை ஒப்புதல் அளித்துள்ளது. 50 பேருக்கு மேல் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படு் எனவும் இஸ்ரேல் மந்திரி சபை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல், தனது நாட்டில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலரை வெளியிட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் எப்போதும் வேண்டுமென்றாலும் கையெழுத்தாகலாம். இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது காலதாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News