எலக்ட்ரல் வாக்குகள்தான் எல்லாமே.. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் முறை பற்றி தெரியுமா?
- 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
- அமெரிக்காவில் மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளைச் செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.
பிரதிநிதிகள்
அமெரிக்க தேர்தலில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. "Electoral College" எனப்படும் முறை மூலம் அதிபர் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அங்கு இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரல் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களையன்றி மாநில அளவில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளை தான் தேர்வு செய்வார்கள்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அனைத்தையும் சேர்ந்து மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களின் வாக்கு Electoral College ஆகும். இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும்.
எனவே இந்த 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் வாக்குகளில் 270 க்கு மேல் யாருக்கு வருகிறதோ அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து Electoral College வாக்குகளும் அளிக்கப்படும். உதாரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 எலக்ட்ரல் வாக்குகளும் மொத்தமாக வழங்கப்படும்.