உலகம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ரூ.690 கோடி நஷ்டஈடு வழங்க டிரம்புக்கு உத்தரவு

Published On 2024-01-27 05:30 GMT   |   Update On 2024-01-27 05:34 GMT
  • குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார்.
  • தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நியூயார்க்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார்.

1990-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என்று டிரம்ப் கூறினார்.

இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், 2019-ம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டாலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என்று தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார்.

ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News