மத்திய அமலாக்க இயக்குனரகம், முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது- வாஷிங்டனில் மத்திய நிதி மந்திரி பேட்டி
- அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை.
- முறையான தகவல் மற்றும் ஆதாரங்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை.
வாஷிங்டன்:
அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் செயல்படும் மத்திய அமலாக்க இயக்குனரகத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அமலாக்க இயக்குனரகம் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது. கார்ப்பரேட் துறையினர் மற்றும் பொது சமூக பிரிவினருக்கு அது எவ்வித அச்சுறுத்தையும் ஏற்படுத்தவில்லை. குற்றங்கள் தொடர்பாக முன்னறிவிப்பு செய்து விசாரணையை நடத்தும் நடைமுறையை பின்பற்றும் ஒரு நிறுவனம்.
மத்திய அமலாக்க இயக்குனரகம் அளிக்கும் தண்டனை விகிதம் மிகவும் குறைவானது. குற்றத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னரே மத்திய அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. தனிப்பட்ட வழக்குகள் அல்லது அணுகுமுறை குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக, அது எங்கு சென்று சோதனை நடத்தினாலும் முதன்மையான ஆதாரங்கள் அதனிடம் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.