நள்ளிரவு நேரத்தில் இலங்கை வந்தடைந்தார் கோத்தபய ராஜபக்சே
- பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
- தலைநகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு.
கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 9 ந் தேதி கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதில் குடிபுகுந்தனர்.
அதற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை துறந்து விட்டு ஜூலை 13 அன்று நாட்டை விட்டே வெளியேறினார். முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
அவரது கட்சி ஆதரவில் ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்ற நிலையில், மீண்டும் நாடு திரும்ப கோத்தபய ராஜபச்சே முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றிரவு அவர், தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டார நாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கி கோத்தபய, அங்கிருந்து எந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் இல்லை. இந்நிலையில் கோத்தபய இலங்கை வந்துள்ளதால் மீண்டும் அவருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்புவின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.