உலகம் (World)

போர்நிறுத்தம்: இஸ்ரேலின் திட்டம் குறித்து ஹமாஸ் தலைவர் பதில்

Published On 2024-01-31 05:07 GMT   |   Update On 2024-01-31 05:07 GMT
  • போரில் இதுவரை 26,751 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
  • நிரந்தர போர்நிறுத்தத்தை இஸ்ரேல் புறக்கணித்ததாக ஹனியே கூறினார்

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது.

இஸ்ரேல் ராணுவ படையினர் ஹமாஸ் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.

இன்று வரை 26,751 பேர் உயிரிழந்ததாகவும், 65,636 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது. உயிரிழந்தவர்களில் பலர் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் கூறியது.

போர் இடைநிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தும் இஸ்ரேல் அவற்றை புறக்கணித்து விட்டது.

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேலி பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்டு, ஹமாஸ் அமைப்பினரயும் சரணடைய செய்யும் வரை போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

ஹமாஸ் அமைப்பினரின் வசம் 136 பணய கைதிகள் இன்னும் உள்ளதாக கூறும் இஸ்ரேல், காசா முழுவதும் அவர்களை தேடி வருகிறது.


இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒர் இடைக்கால போர்நிறுத்த திட்டத்தை முன்வைத்துள்ளது.

இதனை செயல்படுத்த பேச்சு வார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தனர்.

இது குறித்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) தெரிவித்ததாவது:

அமைதிக்காக இஸ்ரேல் முன்மொழிந்துள்ள ஒரு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயல்படுத்த கூடிய எந்த திட்டத்திற்கும் நாங்கள் தயார்.

இஸ்ரேல் வழங்கியுள்ள இத்திட்டத்தின்படி 6-வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், ஹமாஸ் கைதிகளை இஸ்ரேலும், பரஸ்பரம் விடுவிக்க வேண்டும்.

நிரந்தர போர்நிறுத்தத்திற்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்; ஆனால், அதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

இவ்வாறு ஹனியே கூறினார்.

கடந்த 2023 நவம்பர் இறுதியில் ஒரு-வார கால போர் நிறுத்தத்தில் சுமார் 105 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்ததும், இஸ்ரேலிய சிறைகளில் இருந்த 240 பயங்கரவாத குற்றவாளிகளை இஸ்ரேல் விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News