ஆப்கானிஸ்தானில் கனமழை - வெள்ளப்பெருக்கு: பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக பாக்லான், கோர், ஹெராத் ஆகிய மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்குள்ள 4 பள்ளிக்கூடங்கள், மசூதி உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் சுமார் 2 ஆயிரம் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மீட்பு படையினர் அங்கு களத்தில் இறங்கி உள்ளனர்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை அவர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.