செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
- கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
- சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஏமன்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.
மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.