அமெரிக்காவை அலறவிட்ட ஹெலன் புயல்: 200-ஐ கடந்தது பலி எண்ணிக்கை
- புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
- இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.
ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.
புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.