பாலஸ்தீன போரை நிறுத்துவேன் - டிரம்ப் கொடுத்த வாக்குறுதி.. வைரலாகும் வீடியோ
- அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து, உடனே வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின. அமெரிக்காவில் அதிபர் பதவியை பெற வேட்பாளர் குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 295 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை வென்றுள்ளார். வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
டொனால்டு டிரம்ப் இரண்டவாது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் வாக்கு சேகரிப்பின் அங்கமாக டொனால்டு டிரம்ப் யு.எஃப்.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யு.எஃப்.சி. வீரர் கபீப் நூர்மகோமெடோவை சந்தித்து பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவின் படி முதலில் பேசிய கபீப், "டொனால்டு டிரம்ப்-இடம் பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்," என்றார். இதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், "நாம் நிறுத்துவோம். நான் போரை நிறுத்துவேன்," என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் விரைந்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், டிரம்ப் கொடுத்த வாக்குறுதி தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் விடாமல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது.