உலகம்

 பிலாவல் பூட்டோ

பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்பட வேண்டும்: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அழைப்பு

Published On 2022-09-30 07:18 GMT   |   Update On 2022-09-30 07:18 GMT
  • உருகும் பனிப்பாறைகளே, பாகிஸ்தானின் பேரழிவு நிலைக்கு காரணம்.
  • பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

வாஷிங்டன்:

பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்,இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஊடக குழுவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறோம். தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இணைந்து செயல்படுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் உருகும் பனிப்பாறைகள்தான் பாகிஸ்தானின் இந்த பேரழிவு நிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பல காரணங்களுக்காக நாங்கள் (இந்தியாவுடன்) இணைந்து செயல்படுவது 2018-19 ஆண்டிற்கு பிறகு சாத்தியமற்றதாகி உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஏதேனும் ஒரு பகுதி இருந்தால், அதுதான் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்,

ஏனென்றால், நாங்கள் அனுபவித்தது, எங்கள் எதிரிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த பிலாவல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்ப்பதில் பாகிஸ்தான் நிலைப்பாடு உறுதியானது என கூறினார்.

Tags:    

Similar News