உலகம்

டோர்னியர் விமானத்தின் முன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் உயர் அதிகாரிகள்

சீன உளவு கப்பல் வருகைக்கு முன்னதாக, கண்காணிப்பு விமானத்தை இலங்கையிடம் வழங்கியது இந்தியா

Published On 2022-08-15 10:27 GMT   |   Update On 2022-08-15 10:27 GMT
  • கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.
  • இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது.

கொழும்பு:

இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற இந்திய தூதர் கோபால் பாக்லே

நிகழ்ச்சியில் பேசிய கோபால் பாக்லே, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாக டோனியர்-228 விமானம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இந்தியாவுடனான ஒத்துழைப்பின் பிற பகுதிகளின் பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டிருப்பது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவின் பலம் அதன் நட்பு நாடுகளின் பலத்தை கூட்டுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் கோபால் பாக்லே கூறினார்.

இந்த கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இயக்குவதற்கு இந்திய கடற்படை ஏற்கனவே இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் குழுவினருக்கு பயிற்சி அளித்துள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது. இதறகு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் தூதரக ரீதியில் கோரியிருந்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது.

இந்த நிலையில், தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Tags:    

Similar News