நேபாள பொது தேர்தல் - 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா
- நேபாளத்திற்கு இதுவரை 2,400 வாகனங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்கியுள்ளது.
- நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாள நிதி மந்திரி ஜனார்தன் சர்மாவிடம் இந்தியா சார்பில் 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்தலின்போது, பல்வேறு நேபாள அமைப்புகளுக்கு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் இந்த அன்பளிப்பை இந்தியா வழங்கியுள்ளது என காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த 200 வாகனங்களில், தேர்தலின்போது பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக பாதுகாப்பு படைகளுக்கு 120 வாகனங்கள் வழங்கப்படும். மீதமுள்ள 80 வாகனங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளும். இதுவரை இந்தியா சார்பில் நேபாள நாட்டிற்கு 2,400 வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன என்று காத்மண்டு நகரில் உள்ள நேபாளத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது