உலகம்

இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள்-தொழிலாளர்கள் அச்சம்

Published On 2024-10-03 09:06 GMT   |   Update On 2024-10-03 09:06 GMT
  • மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
  • 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

டெல் அவிவ்:

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் வசிக்கிறார்கள். மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

அங்கு வசிப்பவர்களில் பலர் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவருமே இந்த ஏவுகணை தாக்குதலை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு தங்களின் உறவினர்களுடன் அவர்கள் உருக்கமாக பேசியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலால் நாளுக்கு நாள் எங்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதலை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. டெல் அவிவ் நகருக்குள் ஏவுகணைகள் வந்து விழும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இஸ்ரேலில் வசிக்கும் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'இங்கு நல்ல சம்பளம் என்பதால் வேலைக்கு வந்தேன். இங்கு 5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். எனது குழந்தைகளின் கல்விச்செலவுக்காக இங்கு வந்து சம்பாதிக்கிறேன். ஆனால் இங்கு இப்போது இருக்கும் நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது' என்றார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 700 பேர் டெல் அவிவ் நகரில் வசிக்கிறார்கள். ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று பயந்து தெலுங்கானாவை சேர்ந்த சிலர் கடந்த மாதமே இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால் பலர் இன்னும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தற்போது தினம் தினம் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News