இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: கணக்கெடுப்பில் தகவல்
- இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
- பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.
லண்டன் :
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.
இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.