உலகம்

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி.. அமெரிக்காவில் அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்

Published On 2023-07-23 04:37 GMT   |   Update On 2023-07-23 04:37 GMT
  • அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது.
  • அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

வாஷிங்டன்:

இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது. இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளதால், விரைவில் விற்று தீர்ந்துவிடுகின்றன.

அரிசியை பிரதான உணவாக கொண்ட ஆசிய சமூகத்தினர் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மக்கள் வருகை அதிகரிப்பதால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News