உலகம்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க வங்காளதேச இடைக்கால அரசு முடிவு?

Published On 2024-09-01 05:14 GMT   |   Update On 2024-09-01 05:14 GMT
  • உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.
  • கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள்.

இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் இடைக்கால அரசின் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹொசைன் கூறியதாவது:-

ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பாக பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை. உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.

இந்த கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

அது இந்திய அரசாங்கத்திற்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவ்விவகாரத்தை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதே எங்களின் கொள்கையாகும். யாருடனும் பகைமை கொள்ளாமல், சமநிலையான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளோம். எங்களது முதன்மைப் பணி நமது நலன்களைப் பாதுகாப்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News