உலகம்

சர்வதேச மகளிர் தினம் - ஒரு பார்வை

Published On 2024-03-08 07:04 GMT   |   Update On 2024-03-08 07:04 GMT
  • மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது

1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.


1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.

1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.

2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.

பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.

சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.


சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.

முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.


முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.

மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.

ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

Tags:    

Similar News