உலகம்

இஸ்மாயில் ஹனியே படுகொலை.. ஹமாஸ் புதிய தலைவர் நியமனம் - இஸ்ரேல் சொல்வது என்ன?

Published On 2024-08-07 01:36 GMT   |   Update On 2024-08-07 03:36 GMT
  • ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
  • புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

2 மாதங்களுக்கு முன்பே அவரது வீட்டில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.

 

இஸ்ரேல் தான் இதற்குக் காரணம் என்று ஈரான் கடுங் கோபத்தில் உள்ள நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் மூலம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். 

இதற்கிடையில் ஹமாஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வார்  அழித்தொழிக்கப்படவேண்டியவர் என்றும்  ஹமாஸ் அமைப்பு உலகத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News