உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மற்றொரு ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட தலைவர் உயிரிழப்பு

Published On 2024-09-29 12:27 GMT   |   Update On 2024-09-29 12:27 GMT
  • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

ஜெருசலேம்:

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் படுகாயம் அடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தலைவரான நபில் கவுக் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முக்கிய தலைவர்களை இழந்து வருவது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News