உலகம்

போர் முடிவுக்கு வருமா? விரைவாக முன்னேறும் இஸ்ரேல் ராணுவம்

Published On 2023-11-08 07:18 GMT   |   Update On 2023-11-08 07:18 GMT
  • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
  • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

"போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

"உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News