ஹமாஸ் ராணுவ தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல்: 71 பேர் உயிரிழப்பு
- அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தெய்ஃப் முகமது.
- சுரங்கத்தில் மறைந்து இருந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டியுள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் காசாவின் தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது.
ரஃபா நகருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கான் யூனிஸ் நகர் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அங்கு ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டியதாக கூறியது. பின்னர் அங்கு பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ரஃபா பகுதியில் இருந்து மக்கள் அந்த பகுதிக்க செல்லுமாறு எச்சரித்தது.
இந்த நிலையில் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ஃப் எனக் கருதப்படுகிறது. இவர் கான் யூனிஸ் அருகே உள்ள அல்-மவாசி பகுதியில் சுரங்கத்தில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.
இதை அறிந்து கொண்ட இஸ்ரேல் அந்த பகுதியில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீது ஆர்வம் காட்டவில்லை என்பது காண்பிக்கிறது என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், 289 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்தார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
முகமது தெய்ஃப் இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேலின் பல தாக்குதலில் உயிர்தப்பினார். தற்போதைய இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா? என்பது தெளிவாகவில்லை.