போருக்குப்பின் காசாவின் ஆட்சி நிர்வாகம்: திட்டத்தை வெளியிட்டார் இஸ்ரேல் மந்திரி
- பிணைக்கைதிகளை மீட்கும்வரை போர் தொடர்ந்து நடைபெறும்.
- இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் காசா பகுதியின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்திற்கான தனது திட்டத்தை முன்வைத்தார்.
போர் முடிவடைந்த பின்னர் பாலஸ்தீன பகுதியை ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ஆளப்போவதில்லை. கடந்தாண்டு அக்டோபர் 7-ந்தேதி பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்டெடுக்கும் வரை, ஹமாஸின் ராணுவ மற்றும் ஆளும் திறன்களை சிதைத்து, எஞ்சியிருக்கும் ராணுவ அச்சுறுத்தல்களை அகற்றும் வரை போர் தொடரும்.
ஹமாஸ் கட்டுப்படுத்தாத வகையில், இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.
போரின் இலக்குகள் அடையப்பட்ட பிறகு காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடமாட்டம் இருக்காது. ஆனால் இஸ்ரேல் அப்பகுதிக்குள் செயல்படும் திறனை தக்க வைத்துக் கொள்ளும்.
காசாவில் வாழும் மக்கள் பாலஸ்தீனியர்கள். எனவே பாலஸ்தீனிய அமைப்புகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளோ அச்சுறுத்தல்களோ இருக்காது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் அமைப்பு நிர்வாகத்தில் அமர்த்தப்படும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.