தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் பலி
- கான் யூனிஸ், ரஃபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- மத்திய காசாவில் 10 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தலைவர் முகமது தெய்ஃப்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பின்னரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரையை வழங்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காசா மீதான கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 120 பிணைக்கைதிகளை விடுவிக்கவும் சர்வதேச மத்தஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் மக்கள் வசித்து வந்த நான்கு வீடுகள் மீது நடத்தப்பட்டதாக அவசர பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காசாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு விரிவாக இந்த தாக்குதல் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தெற்கு காசாவில் திங்கட்கிழமை (நேற்று) இரவு இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.