இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
- நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
- சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக இருந்த நிலையில், அங்கு சென்ற நேதன்யாகுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவரை டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்திற்கு சென்று பரிசோதனை செய்யும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாராந்திர இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.