"அமைதிக்கான சரியான தருணம் இதுதான்" - ஐ.நா. பொதுச்செயலாளர்
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன
- 2 வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றார் பொதுச்செயலாளர்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கிடையே போர்கள் தோன்றாமல் இருக்க அமெரிக்காவின் தலைமையில் பல உலக நாடுகளை உள்ளடக்கி உருவான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் (United Nations) அமைப்பு.
ஐ.நா. சபையின் முக்கிய அங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை (UN Security Council).
இதில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவற்றில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5.
2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் நேற்றுடன் 2-வருட காலகட்டத்தை நிறைவு செய்துள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் போர்நிறுத்த கோரிக்கையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.
இப்பின்னணியில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:
2 வருடங்களாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஒரு திறந்த, ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.
உக்ரைனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழந்து விடுவோமோ என அச்சத்திலேயே வாழ்கின்றனர்.
ரஷிய வீரர்களும் இப்போரினால் உயிரிழக்கின்றனர்.
இரண்டு வருடங்களாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம். போதும்.
சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.
இவ்வாறு குட்டெரஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள், பல நாடுகளின் அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரஷிய உக்ரைன் போரினால் இதுவரை உக்ரைனில் பொதுமக்களில் 10,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.